ராகுல் பேச்சால் 02 வது நாளாகவும் முடங்கிய அவை; அமளியில் ஈடுப்பட்ட 08 எம்பிக்கள் இடைநீக்கம்; எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம்..!
Eight MPs who created a ruckus in Parliament in support of Rahul Gandhis speech have been suspended
முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே, லடாக்கில் இந்திய ராணுவ நிலையை குறிவைத்து சீன ராணுவ பீரங்கிகள் அபாயகரமாக முன்னேறியதாக அவர் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றை குறிப்பிட்டு நேற்று ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். அவரது பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இந்த சர்ச்சை காரணமாக நேற்று மாலை முடங்கியது.
அதாவது, பதிப்பிக்கப்படாத நூலை குறிப்பிட்டு பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தியை தடுத்தார். இதனையடுத்து அவைக்குறிப்பிலிருந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே எழுதிய புத்தகத்தின் உண்மைத் தன்மையை தான் அங்கீகரிப்பதாக கூறி ராகுல் இன்று காலை மீண்டும் நாடாளுமன்றத்தில் பேச்சை தொடங்கினார். ஆனால், குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானம் தவிர வேறு எது குறித்தும் பேசக்கூடாது என அவைத்தலைவர், அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.
தேசப்பாதுகாப்பு குறித்து குடியரசுத் தலைவர் பேசியுள்ளதாகவும் அது சார்ந்தே தானும் பேசுவதாகவும் ராகுல் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் பேசுவதற்கு அனுமதி தேவையில்லை என ராகுல் விளக்கினார். அந்த நிலையில், இரு தரப்பு உறுப்பினர்களும் கூச்சலிட்டதால் அவையில் அமளி நிலவியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி எறிந்து கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி 08 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவை விதிகளை மீறியதாக மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன், ஹிபி ஈடன், அம்ரிந்தர் சிங், டீன் குரியகோஸ் உள்ளிட்ட உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சபாநாயகரின் முடிவை எதிர்த்து ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Eight MPs who created a ruckus in Parliament in support of Rahul Gandhis speech have been suspended