'மண்ணில் புதைந்து கிடக்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கை சுவடுகள்': கமுதி அருகே அகழாய்வு நடத்த கோரிக்கை..!
Request to conduct excavations near Kamudi to retrieve rare information about the lives of Tamils 2000 years ago buried in the soil
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பல்வேறு தேவைகளுக்காக நிலத்தை தோண்டும் போது பழங்கால பொருட்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இதனால், கீழடி அகழாய்வு போன்றே இப்பகுதியிலும் அழாய்வு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, கமுதி அருகே உள்ள பேரையூர், மருதங்கநல்லூர், ஆனையூர், செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால குடுவைகள், பானை ஓடுகள், செங்கற்கள் கிடைத்துள்ளன. அத்துடன், பழங்கால கட்டுமான அமைப்புகளும் காணப்பட்டுள்ளது. அதாவது கீழடியில் கிடைத்த பொருட்களை ஒத்தவையாக இந்த பொருட்களும் உள்ளது. இது குறித்து பேரையூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் முனியசாமி கூறியுள்ளதாவது:
கமுதி அருகே குண்டாறு படுகையில் அண்மையில் தூர்வாரும் பணி நடைபெற்ற போது, அங்கு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து அரிய நந்தி சிலை கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மருதங்கநல்லூரில் 10-ஆம் நூற்றாண்டு (முற்கால பாண்டியர்) காலத்து சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி பார்வதி சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆனையூர், செங்கமேடு பகுதிகளில் சாலை பணியின்போது, கீழடி அகழாய்வில் கிடைத்தது போல சீன பானை ஓடுகள், கருஞ்சிவப்பு பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், சிறு கிண்ணங்கள், பழங்கால செங்கல் ஆகியவை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், ஆனையூர் பகுதியில் கீழடியில் காணப்படுவது போல வடிகால் அமைப்பும் உள்ளதாகவும், இப்பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு செய்தால் கீழடியில் கிடைத்தது போல சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த அரிய தகவல்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Request to conduct excavations near Kamudi to retrieve rare information about the lives of Tamils 2000 years ago buried in the soil