கூட்டணிக்காக தியாகம் செய்யும் காலம் முடிந்துவிட்டது... காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி!
DMK Congress alliance
சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மக்கள் நம்பிக்கையின் கட்சியாக இருந்த அண்ணா திமுக, இன்று அமித் ஷா திமுகவாக மாறிவிட்டது. பழனிச்சாமியின் கைகளில் அதிமுகவின் முடிவு எழுதப்படுகிறது” என்றார்.
அவர் மேலும், “மாவட்டம் முதல் மாநிலம் வரை அதிமுக தவறான கைகளில் சென்றுவிட்டது. அதனால் கட்சியின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. 1996ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதும் 27 சதவீத வாக்கு பெற்ற அதிமுக, கடந்த மக்களவை தேர்தலில் 21 சதவீதத்துக்கு சரிந்தது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.
“வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. ஆனால் அந்த தாக்கத்தின் அளவு வாக்குப்பெட்டி திறக்கும் வரை தெரியாது. இண்டி கூட்டணிக்கு எதிராக ஒரு புதிய கட்சி உருவாகலாம், ஆனால் அது அதிமுக அல்ல என்பது தெளிவாகிறது” எனவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “காங்கிரஸ் கட்சி இதுவரை கூட்டணிக்காக பல தியாகங்களைச் செய்துள்ளது. இப்போது எங்களது உரிமையை கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் அந்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் நான் வலியுறுத்திப் பேசுவேன்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.