அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே அதிமுகதான்: உதயநிதிக்கு அரசியல் தெரிந்திருந்தால் இப்படி பேசமாட்டார்: இபிஎஸ் பதிலடி..!
EPS says Udhayanidhi doesnt know politics
தமிழகம் முழுவதும் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற கருப்பொருளில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சிப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் படி இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது, 'அதிமுக கட்சி அலுவலகம் அமித்ஷா வீட்டில் இயங்குகிறது என சொல்லும் துணை முதல்வர் உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பு இல்லை. தெரிந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார்,'' என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்கிறார் முதல்வர். எப்போதோ தலைகுனிந்து விட்டது என்றும், உங்கள் கட்சிக்காரர் செய்த 02ஜி ஊழல் வெளி வந்தபோதே தமிழகம் தலைகுனிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியில் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும், மக்கள்தான் ஏமாற்றம் அடைந்துவிட்டனர், ஓட்டுப்போட்ட மக்களை மறந்த கட்சி திமுக என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், அதிமுக ஆட்சி கடனில் தத்தளிப்பதாக ஸ்டாலின் சொன்னார். அதிமுக ஆட்சியில் சாலை, பாலம், குடிமராமத்து, கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் கொடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் இல்லை, ஆனால் கடன் மட்டும் வாங்குகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டிஜிபி பட்டியலை மத்திய அரசு அனுப்பியும் இன்னும் திமுக அரசு நியமிக்கவில்லை. சட்டம் ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இவர்களுக்கு யார் வேண்டியவரோ, அவரது பெயர் வரும்வரை காத்திருக்கிறார்கள் என்றும், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி டிஜிபி நியமனம் இருக்க வேண்டும் அதையும் இந்த அரசு பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், அதிமுக கட்சி அலுவலகம் அமித் ஷா வீட்டில் இயங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி பேசியிருக்கிறார். ராயப்பேட்டையில் தான் அதிமுக அலுவலகம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளதோடு, நீங்களும் உங்கள் அப்பாவும்அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்குவதற்குத் திட்டம் போட்டீர்கள். சில பேர் தூண்டுதலின் பேரில் அடித்து நொறுக்கினார்கள். அதை சாக்காக வைத்து அலுவலகத்துக்கு சீல் வைத்தீர்கள். ஆனால், அந்த சீலை அதிமுக உடைத்தெறிந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருணாநிதி காலத்தில் திமுக இரண்டாக உடைந்தது, கருணாநிதி ஒருபக்கம், வைகோ ஒருபக்கம் இருந்தனர். அப்போது அந்த கட்சியை கைப்பற்ற முயற்சித்தனர், அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்த கட்சி அதிமுக. மறந்துவிடாதீர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்களைப்போல எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும், சக்கரம் சுழல்கிறது, கீழே உள்ள சக்கரம் மேலே வரும். அதிமுக ஆட்சி வந்ததும் பதிலடி கொடுப்போம் என்றும், உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பே இல்லை, அப்படி தெரிந்திருந்தால் இப்படி பேசமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமரை எத்தனை முறை தமிழகத்துக்கு அழைத்து வந்தீர்கள். உங்கள் மீது நடவடிக்கை பாயக்கூடாது என்பதற்காக நடித்த நாடகம் எல்லாம் வெளுத்துவிட்டது என்று பேசியுள்ளார். கேலோ இந்தியா விழாவுக்கு பிரதமரை அழைத்து வந்து உதயநிதி நடத்தினார். அப்போது அவர் நல்ல பிஎம். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் நடத்த வரும் போது நல்ல பி.எம். கலைவாணர் அரங்கில் மத்திய அரசு திட்டம் நடத்தியபோது நல்ல பிஎம், இப்போது தேர்தல் வந்தால் மட்டும் மோசமான பிஎம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம். என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாட்டியுள்ளார்.
English Summary
EPS says Udhayanidhi doesnt know politics