கரூர் துயரம்: '16 நாள் காரியம் முடியும் வரை பேச மாட்டோம்: நீதித்துறையை நாடி உண்மை சொல்வோம்: ஆதவ் அர்ஜூனா உறுதி..! - Seithipunal
Seithipunal


கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் கண்டிப்பாக வெளியே சொல்வோம் என தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தவெக ட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், புஸ்ஸி ஆனந்த் 02-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு மத்தியில் ஆதவ் அர்ஜூனா டில்லி சென்றுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக வெளியிட்ட பதிவுக்காக வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளதாவது: 'நமது வீட்டில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள் துக்கம் அனுசரித்து வலியோடு இருப்போம். கட்சித் தலைவர், கட்சி, தோழர்களும், எங்கள் குடும்பத்தில், எங்கள் மக்கள், உறவுகளை இழந்து 16 நாள் துக்கத்தில் உள்ளனர். 16 நாள் காரியம் முடியும் வரை யாரும் பேச மாட்டோம். அந்த அளவுக்கு மிகுந்த வலியோடு இருக்கிறோம். எங்கள் வலிமிகுந்த நாட்களோடு 41 பேரின் குடும்பத்தோடு, அவர்களின் வலியோடு கடந்து கொண்டுள்ளோம்.

16 நாள் காரியம் முடியும் வரை விஜயின் முடிவும் சரி, எங்களின் முடிவும் சரி, எந்த அரசியலோ எந்த விதமான அவதூறுகளோ, தவறான செய்திகளோ பரப்பப்படும் போது பதில் கொடுக்காமல் எங்கள் மக்களோடு இருக்கிறோம். 16 நாள் காரியம் முடிந்தவுடன் என்ன உண்மைகளோ அதனை கண்டிப்பாக சொல்வோம். கட்சி மீது அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி எங்கள் நிர்வாகிகளை கைது செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, கட்சியை முடக்க நினைக்கும் போது நீதித்துறையை நாடி உண்மையை வெளியே கொண்டு வருவதற்கான சட்டப்போராட்டத்தை துவக்கியுள்ளோம்.

வலியோடு இருக்கும் மக்களை சந்திப்பதற்கான திட்டங்களை உருவாக்கிக்கொண்டு உள்ளோம். 16-ஆம் நாள் காரியம் முடிந்த உடன் பேசுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சாமானிய மனிதராக நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். உண்மை வெளியே வரும். கட்சியின் மாவட்ட செயலாளர்கள், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கைது செய்யப்படுகின்றனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adhav Arjuna vows to seek justice and tell the truth about the Karur tragedy


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->