பதிவு ஆவணம் உரிமை பெற்றவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்..மாவட்ட ஆட்சியர் தகவல்!
Registered document holders can apply at e-service centers District Collectors information
திருவள்ளூர் மாவட்டத்தில் வாரிசுதாரர்கள், பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை இ-சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள்அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.
English Summary
Registered document holders can apply at e-service centers District Collectors information