சென்னையில் நிகழ்ச்சி... பயங்கரவாதிகளுடன் தொடர்பு... புனே ஜுபைர் ஹேங்கர்கேகர் கைதும், பின்னணியும்!
pune techie arrested
மகராஷ்டிர மாநிலம் புனேவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த 35 வயதான ஜுபைர் ஹேங்கர்கேகர் மீது, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவர் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு (ATS) கண்காணிப்பில் இருந்தார்.
தொடர்ந்த விசாரணையில், ஜுபைர் பாகிஸ்தானின் அல்-கொய்தா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், இளைஞர்களை தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டியதும், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, இளைஞர்களை தீவிரவாத பாதையில் இழுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட பிரச்சாரப் பொருட்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், ஜுபைர் சமீபத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சென்னை சென்றிருந்ததும் தெரியவந்தது. இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவே சென்றதாக தெரிவித்திருந்தாலும், அதில் அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜுபைரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். வழக்கின் தன்மை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் ஜுபைரை நவம்பர் 4 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.