வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்..அமைச்சர் நாசர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
Preparations for Northeast monsoon Review meeting chaired by Minister Nasar
திருவள்ளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கி பேசினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக அனைத்து துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கி அதன் அடிப்படையில் இந்த பேரிடர் மேலாண்மையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுகளை எல்லாம் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை முக்கிய கருபொருளாக கொண்டு இக்கூட்டம் சீரிய முறையில் நடத்தப்பட்டது என அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , காவல் துறை , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை , ஊரக வளர்ச்சித் துறை , மாநகராட்சி / நகராட்சி மற்றும் பேரூராட்சி , பொதுப்பணித்துறை (பராமரித்தல் ரூ கட்டுமானம்), உணவு பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இணைப் பதிவாளர்,கூட்டுறவு சங்கங்கள், நெடுஞ்சாலைத் துறை , சுகாதாரத் துறை , வேளாண்மை துறை , போக்குவரத்துத் துறை , வனத்துறை , முதன்மை கல்வி அலுவலர், பால்வளத்துறை (ஆவின்) , மின்சார வாரியம் , மக்கள் தொடர்பு அலுவலர் , கால்நடை பராமரிப்புத் துறை ,மீன்வளத் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அக்குழுவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), இணை இயக்குநர் சுகாதாரத்துறை , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), ச.சந்திரன் (திருத்தணி), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி),துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிகுமார்,ஆவடி மாநகர துணை ஆணையர்கள் கே.பெரோஸ் கான் அப்துல்லா, பா.பாலாஜி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Preparations for Northeast monsoon Review meeting chaired by Minister Nasar