பூண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர்,சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
Poondi Grama Sabha Meeting District Collector MLA Participate
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி,இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தனி அலுவலர்கள் கொண்டு கிராம சபையில் நடைபெறும். மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது மேலாய்வு செய்து நிவர்த்தி செய்வது தான்.. இந்த கிராம சபையில் முதல் நோக்கமாகும்.
தற்பொழுது உங்களின் முக்கியமான கோரிக்கை 100 நாள் வேலையில் சம்பளம் வரவில்லை என்று கூறுவீர்கள். முதல் இரண்டு வாரத்திற்கான சம்பளம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து அடையும்.பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு நிலை அடைய வேண்டும் என்பது தான். மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட மகளிர்களுக்கு தகுதியின் அடிப்படையில் கிடைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அது மட்டுமல்லாமல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு வீடு வழங்கு திட்டம், குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சாலை வசதி போன்ற பல்வேறு வசதிகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உங்கள் ஊராட்சியினை பசுமையாக வைத்திருக்கும் வகையில் மரங்களை நடவு செய்து பசுமை நிறைந்த சூழலை உருவாக்கி பசுமையான ஊராட்சியாக தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும்,பொது நோக்கத்துடன் செயல்பட்டு தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும். எந்த ஒரு சமூக பணிகளும் உங்களுடைய வீடுகளில் இருந்து தான் ஏற்பட வேண்டும். உங்கள் குப்பைகளை சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வழங்குவதன் மூலம் உங்கள் ஊரினை தூய்மையாக வைத்திருக்கலாம்.மேலும், பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் ஊராட்சியினை முன்னோடி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் விருது வாங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
முன்னதாக பல்வேறு துறைகளில் மூலம் அவர்களது திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.பின்னர் வேளாண்மை துறை சார்பில் 6 விவசாயிகளுக்கு ரூ.10169 மதிப்பிலான வேளாண் உபகரணங்களும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் யுவராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் உட்கட்டமைப்பு மணிவாசகம், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், சுலோச்சனா, திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Poondi Grama Sabha Meeting District Collector MLA Participate