சென்னையில் நடுரோட்டில் நடந்த கொடூர கொலை; குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீசார்..!
Police have arrested the accused in the Rowdy Ajay murder case in Chennai
சென்னை ஓட்டேரியில் 20 வயதான ரவுடி அஜய் என்பவரை 06 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரியில் எஸ்விஎம் நகரை சேர்ந்தவர் 'பலியாடு' என்கின்ற அஜய். இவர் ஞாயிற்றுக்கிழமை பழைய வண்ணாரப்பேட்டையில் ராமதாஸ் நகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு தனது தோழியான திருநங்கையுடன் பேசிக்கொண்டிருந்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் 06 பேர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் அஜயுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் கைகலப்பாக முற்றிய நிலையில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சரமாரியாக அஜய்யை வெட்டி சாய்த்துள்ளனர். அதைக் கண்டு அங்கிருந்த திருநங்கை அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். தலையில் வெட்டுபட்டு சரிந்து விழுந்த இளைஞரை மர்ம நபர்கள் தொடர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அஜய் மீது கொலை முயற்சி, பாலியல் சீண்டல் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால், முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது உள்நோக்கம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Police have arrested the accused in the Rowdy Ajay murder case in Chennai