வங்கக்கடலில் வலுவடையும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!
New Low-Pressure Area Over Bay of Bengal to Intensify Heavy Rain Warning Issued for Tamil Nadu
வடக்கு அந்தமான் மற்றும் அதனைச் சார்ந்த கடற்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடையும். தொடர்ந்து, வரும் 22-ஆம் தேதி இது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) உருவெடுத்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை (இன்றும் நாளையும்):
இதன் தாக்கத்தால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 15 மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை எச்சரிக்கை:
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
English Summary
New Low-Pressure Area Over Bay of Bengal to Intensify Heavy Rain Warning Issued for Tamil Nadu