அரசே அறிவித்தும் அநியாய விலை விற்கும் அவலம்! தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் - டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin M sand
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமானத் தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக் கூடிய இந்த விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டாதால், அவற்றிற்கு அதிக ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. அத்துடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில்சிறு கனிம நிலவரி விதிக்கப்பட்டது. இவற்றால் ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டன. இதைக் கண்டித்தும் ராயல்டி உயர்வு, புதிய நிலவரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த மாதம் 22-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதைத் தொடர்ந்து கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களை அமைச்சர் துரைமுருகன் கடந்த 27-ஆம் தேதி அழைத்துப் பேசினார். அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 எனக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொட்ர்ந்து உயர்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் ப்ணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து , வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.
எனவே, தமிழக அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாதது தான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin M sand