பெண்களின் திருமண வயது 21 சட்டம் புரட்சிகரமானது! தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாலயப் பிரதேச சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இது பெண்களின் கல்வி மற்றும் தன்முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் புரட்சிகரமான சட்டமாகும். தேசிய அளவில் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கர்நாடக மாநில உயர்நீதிமன்றம், இராஜஸ்தான் உயர்நீதிமன்றம்  உள்ளிட்ட பல உயர்நீதிமன்றங்களும் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றன. 

அந்தக் கோரிக்கை பத்தாண்டுகளுக்கும் மேலாக  நிறைவேற்றப்படாமல் இருந்த நேரத்தில் இமாலய அரசு  பெண்களின் திருமண வயதை உயர்த்தி சட்டம் இயற்றியிருப்பது உண்மையாகவே பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகில் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதற்கான காரணங்களில் முதன்மையானது பெண்களுக்கு இளம் வயதில் திருமணமாவதும், இளம் வயதிலேயே அவர்கள் தாய்மையடைவதும் தான். 

அவர்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கும் நீடிப்பதால் இந்தியாவில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப் பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை. இதற்காகவே இந்த சட்டத்தை வரவேற்கலாம்.

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 56% பெண்களுக்கு 21 வயதுக்கு முன்பாக திருமணம் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெண்களில் 75 விழுக்காட்டினருக்கு 21 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்று விடுகிறது.  இதனால், அந்த பெண்களால் பட்டப்படிப்பை படிக்க முடிவதில்லை.  

போதிய கல்வியறிவு இல்லாததால் அவர்கள், அவர்களின் அனைத்துத் தேவைகளுக்கு குடும்பத்தினரையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.  மாறாக, பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட்டால், அனைத்துப் பெண்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை படிக்க முடியும். இது அவர்களின் முன்னேற்றத்திற்கும், தற்சார்புக்கும்  வழிவகுக்கும்.

பெண்களின் திருமண வயதை  21 வயதை உயர்த்துவது குறித்து வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்த மத்திய அரசு, அதனடிப்படையில் சட்ட முன்வரைவை தயாரித்து  கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. 

ஆனால், சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அதை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட போதிலும்  நிலைக்குழு அதன் பரிந்துரையை வழங்கவில்லை.  

நிலைக்குழுவின் காலக்கெடுவை இனியும் நீட்டிக்காமல், அதன் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு அரசும் பெண்களின்  திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை  தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Woman Marriage age 21 Law TNgovt Central Govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->