#Breaking: இட ஒதுக்கீடு சமூக நிதி விஷயத்தில், தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் அதிரடி கோரிக்கை.! உச்சகட்ட எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


சமூகநீதி விஷயத்தில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை  சேர்க்கவும், ஒரு சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட தன்மையை தீர்மானிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை; அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தத் தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது.

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தான் இனி எந்தெந்த சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க முடியாது என்று 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு 3:2 பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்திருக்கிறது. மாநில அளவிலான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை எந்தெந்த சமுதாயங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்கும் அதிகாரம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும், அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கும் இருந்து வந்தது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்காக 2018&ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 102&ஆவது திருத்தம் செய்யப்பட்டு, அதன் மூலம் 338 பி, 342 ஏ ஆகிய பிரிவுகள் சேர்க்கப்ப்பட்டன.

338பி பிரிவின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப் பட்டது. 342 ஏ பிரிவின் மூலம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதிகளை சேர்க்கலாம் என்ற அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டும் தான் உண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்த தெரிவுக்குழுவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு விளக்கம் அளித்த மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டும், மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யார், யாரைச் சேர்ப்பது  என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்று கூறினர்.

மராத்தா வழக்கில் வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 342 ஏ பிரிவு சேர்க்கப்பட்டது மத்திய இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது தொடர்பானது தானே தவிர, இச்சட்டத் திருத்தத்தால் மாநில அரசுகளில் அரசுகளின் அதிகாரம் எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை என்று கூறினார். மாநில அளவில் யார், யாருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த விளக்கத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ரவீந்திர பட் தலைமையிலான 3 நீதிபதிகள் இதை ஏற்க மறுத்ததுடன், 342 ஏ பிரிவில் உள்ள வாசகங்களின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எந்தெந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவற்றில் புதிதாக எந்த சாதியையும் தமிழக அரசால் சேர்க்க முடியாது.  மாறாக இது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி, அந்த பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அது சாத்தியமாகும். இதனால் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் பின்தங்கிக் கிடக்கும் சாதிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் நினைத்தால் அது சாத்தியமாகாது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஏராளமானவை ஏற்கனவே பறிக்கப்பட்டு விட்ட நிலையில், இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லையானால், அவை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாறிவிடும். இது ஜனநாயகத்துக்கு பெரும் கேடாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 342 ஆவது பிரிவில் திருத்தம் செய்து, மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யார் யாரை சேர்க்கலாம் என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இப்போது இழைக்கப்பட்டுள்ள சமூகஅநீதியை களைய முடியும். ஆகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தத்தை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலிமையாக குரல் கொடுக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to Reservation Law 9 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->