பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், எரிஉலை திட்டங்களை தடுக்கவும் உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss World Environment Day Beat Plastic Pollution
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' (Beat Plastic Pollution) என்பதை 2025ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான ஐநா ஒப்பந்த (UN Global Plastics Treaty) பேச்சுவார்த்தை கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி, 2024 வரை உருகுவே, பிரான்ஸ், கென்யா, நைரோபி, தென் கொரியா ஆகிய நாடுகளில் 5 முறை நடந்தது. கடைசியில் தோல்வியில் முடிந்தது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐநா பிளாஸ்டிக் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் தொடங்குகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்வாண்டின் சுற்றுச்சூழல் நாள் முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு ஒரு பேராபத்து. சுற்றுச்சூழல் கேடுகள், நீர்வள அழிவு, நகர்ப்புற வெள்ளப்பாதிப்பு, விவசாய பாதிப்பு, உயிரிப்பன்பய அழிவு, கடல்வள அழிவு, பறவைகள் அழிவு, காலநிலை மாற்றம் என எண்ணற்றக் கேடுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டால் நேருகின்றன. பிளாஸ்டிக் மாசுபாடு மனிதர்களின் உணவுச் சங்கிலியில் இணைவதாலும், தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டை உருவாக்குவதாலும் பலவகை உடல்நலக் கேடுகளுக்கு காரணமாக உள்ளது. உலகை காக்க பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டியது ஒழிப்பு ஒரு இன்றியமையாத தேவை ஆகும்.
உலகளாவிய, முழுமையான பிளாஸ்டிக் ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் அவை உடனடியாக உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஐநா பிளாஸ்டிக் ஒப்பந்தம் உலக நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தி முதல் கடலில் கலக்கும் மாசு வரை, முழு வாழ்க்கை சுழற்சியை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை வெளிப்படையாக உறுதி செய்யும் வழிகள் இருக்க வேண்டும். ஒப்பந்ததை செயல்படுத்துவதற்கான பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு முழுமையான பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.
பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறி, பிளாஸ்டிக் குப்பையை எரிக்கும் எரிஉலை (incinerator) திட்டத்தை 1,026 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்.
English Summary
PMK Anbumani Ramadoss World Environment Day Beat Plastic Pollution