சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற சென்னை நாளில் உறுதியேற்போம் - தலைவர்கள் வாழ்த்து!
PMK Anbumani And AMMK TTV Dhinakaran wish Chennai Day
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "தென்னிந்தியாவின் தலைநகரமாக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 386-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது.
சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான். ஆனால், சென்னையை வாழத்தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் இன்றைய ஆட்சியாளர்களின் சாதனை. கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம் என்பது தான் இன்றைய சென்னையின் அடையாளமாக மாறியிருக்கிறது.
சென்னையின் சாலைகளில் பயணம் செய்வதே சாகசமாக மாறியிருக்கிறது. அத்தனைக்கும் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையும், அளவில்லாத ஆசையும் தான்.
இந்த நிலையை மாற்றி சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்றுவது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் முதல் நகராட்சி, உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி, தமிழகத்தின் தலைநகரம் எனப் பன்முக பெருமைகளோடு ஒட்டுமொத்த உலகையும் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுச் சிறப்புகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய சென்னை உருவான தினம் இன்று.
படிப்பிற்காகவோ, பணிக்காகவோ தன்னை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையாக, ஏராளமான இளைஞர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, தொழில் முனைவோர்களின் தொடக்கப்புள்ளியாகத் திகழும் சென்னை உருவான இந்நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் போற்றிக் கொண்டாடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani And AMMK TTV Dhinakaran wish Chennai Day