இலங்கைக்கு கடத்த திட்டமா...? ரூ.2 லட்சம் மதிப்பு... 38 கிலோ கடல் அட்டைகள்...! - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
Planning smuggle Sri Lanka 2 lakh worth 38 kg sea cucumbers Confusion Rameswaram
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 38 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்கள் பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் அருகே கரையூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர்கள் மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியக அதிகாரிகள் இணைந்து இன்று அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, அரசால் தடை செய்யப்பட்ட 38 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? அவற்றை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? இலங்கைக்கு கடத்துவதற்காக அவை தயாராக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கடல் அட்டைகள் தொடர்பான பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Planning smuggle Sri Lanka 2 lakh worth 38 kg sea cucumbers Confusion Rameswaram