மது போதையில் கிணற்றில் இறங்கிய தொழிலாளி... 2 மணி நேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்பு...!
Worker who fell well while intoxicated recovered dead after 2 hour search
ஆரணி அருகே விவசாய நிலத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இறைச்சி சமைத்து சாப்பிட்ட தொழிலாளி, உணவு பாத்திரத்தை கழுவுவதற்காக கிணற்றில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம், 35. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது 3 நண்பர்களுடன் சேவூர் புறவழிச்சாலையையொட்டி உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு 4 பேரும் ஒன்றாக மது அருந்தியதாகவும், தாங்கள் கொண்டு சென்ற கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை அங்கேயே சமைத்து சாப்பிட்டதாகவும் தெரிகிறது. விவசாய நிலத்தில் கற்களை அடுக்கி தற்காலிக அடுப்பு அமைத்து, இறைச்சியை சமைத்து உணவு அருந்தியுள்ளனர்.
சாப்பிட்டு முடித்த பின்னர், 4 பேரும் உணவு சமைக்க பயன்படுத்திய பாத்திரங்களை கழுவியுள்ளனர். அப்போது கடாயை கழுவுவதற்காக தண்ணீர் எடுக்க பூங்காவனம் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.மது போதையில் இருந்த அவர், எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் மேலே வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கிணற்றுக்குள் இறங்கி அவரை தேடினர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து உடனடியாக அவசர ஆம்புலன்சுக்கும், ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றுக்குள் இறங்கி பூங்காவனத்தை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் பணிக்கு பிறகு, பூங்காவனத்தின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆரணி நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட சென்ற தொழிலாளி, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Worker who fell well while intoxicated recovered dead after 2 hour search