'மக்கள் மீது அன்பும், கொடையுள்ளமும் கொண்டவர்'...! - விஜயகாந்துக்கு முதலமைச்சர் விஜய் புகழாரம்
He loving and generous towards people Chief Minister Vijay praises Vijayakanth
மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றால் மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்ற விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை தனது வாழ்வின் அடையாளங்களாகக் கொண்டு செயல்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கி, தனது நடிப்பாலும் கம்பீரமான தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் விஜயகாந்த். திரையுலகைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கி, மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட தலைவராக அவர் திகழ்ந்தார்.
ஏழை, எளிய மக்களிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்த விஜயகாந்த், தன்னால் இயன்ற உதவிகளை தயக்கமின்றி வழங்கிய கொடையுள்ளம் கொண்டவராகவும் விளங்கினார்.
மக்கள் மீது கொண்டிருந்த பரிவும், சமூகத்தின் மீது கொண்டிருந்த அக்கறையும் அவரது பொதுவாழ்வில் தனித்த அடையாளமாக அமைந்தன.
திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் தனக்கென அழியாத தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மக்கள் சேவையும், அவரது புகழும் காலம் கடந்தும் நிலைத்தோங்கட்டும்.இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
He loving and generous towards people Chief Minister Vijay praises Vijayakanth