சென்னையில் களமிறங்கிய 750 மின்சார பேருந்துகள்...! கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்...!
750 electric buses launched Chennai Chief Minister Vijay flagged off launch
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து, பொதுமக்களுக்கு நவீனமான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரில் மாசு இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தில் 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பேருந்துகள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம் சென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதி மேலும் விரிவடைவதுடன், பயணிகளுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய வசதியான பயண அனுபவமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய மின்சார பேருந்துகளின் சேவை தொடக்க நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு, 750 மின்சார பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதிய குளிர்சாதன மின்சார பேருந்தில் முதல்-அமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டார். அப்போது பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கலந்துரையாடிய அவர், பேருந்தின் வசதிகள் மற்றும் பயணிகள் சேவை குறித்து கேட்டறிந்தார்.
சென்னையின் பொதுப் போக்குவரத்து துறையில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், பயணிகளின் வசதிக்கும் இந்த புதிய சேவை முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
750 electric buses launched Chennai Chief Minister Vijay flagged off launch