காரணமின்றி ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களிடம் இடைத்தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி! - Seithipunal
Seithipunal


தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் அளித்த தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்பவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது, அத்தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த இந்த மனுவில், இவ்வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், "எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களிலேயே எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றனர். இதனால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவுக்கு அவர்களைப் பொறுப்பாக்கும் வகையில் அதற்கான தொகையை அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இதற்குத் தனிச் சட்டம் இல்லாததால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "நீதிமன்றத்தால் சட்டத்திருத்தம் செய்ய முடியுமா? நாடாளுமன்றமே சட்டம் இயற்ற முடியும்" எனக் கேள்வி எழுப்பித் தீர்ப்பைத் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், வழக்கின் முடிவை இன்று அறிவித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கறிஞர் சுதனின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றுவது என்பது முற்றிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரம் என்றும் நீதிபதிகள் தமது உத்தரவில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PIL Seeking FineDeposit on Resigned MLAs for By-Election Costs Dismissed by Madras High Court


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->