ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி..அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
Perunthalaivar Kamarajar Vegetable Nalangadi at a cost of Rs.3.02 crore. Ministers inaugurated
திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி கட்டிடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (2023-24) திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி கட்டடத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சா.மு. நாசர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, திருத்தணி நகர் மன்றத் தலைவர் பூ. சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தாவது :
திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் 97 கடைகள் கொண்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி கட்டடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி துறையின் கீழ் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக 35 மாநகராட்சிகள் , 160 மேற்பட்ட நகராட்சிகள், 400 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறி அங்காடி, பேருந்து நிலையம், குடிநீர் வசதி கழிப்பறை, சாலை வசதி, கழிவுநீர் வடிகால் போன்ற பணிகள் ஒவ்வொரு நகராட்சி பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
மேலும், சாலை பணிகளைப் பொறுத்தவரை 3780 பணிகளும், தற்பொழுது 5 இலட்சம் எல் இ டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.மீண்டும் 125000 எல் இ டி விளக்குகள் பொருத்துவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு நகராட்சி பகுதிகளிலும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்பட்டும், அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் மேயராகவும் இருந்திருப்பதால் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிவர்த்தி செய்யும் வகையில் நிதிகளை ஒதுக்கீடு செய்து தருகிறார்கள் இந்தத் தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். கோரிக்கைகள் அனைத்தும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு வருவதால் அவரே இக்கோரிக்கையை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று தேவையான நிதியை பெற்று கோரிக்கைகளை பூர்த்தி செய்து கொடுப்பார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பின்னர் 25 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டையினை அமைச்சர்கள் வழங்கி, திருத்தணி நகராட்சி பகுதியில் ரூ.15.67 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டனர். இதில் நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் லட்சுமி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், பொறியாளர் ராஜாவிஜயகாமராஜ், பொதுப் பணி மேற்பார்வையாளர் நாகராஜன், நகராட்சி துணைத் தலைவர் சாமிராஜ், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Perunthalaivar Kamarajar Vegetable Nalangadi at a cost of Rs.3.02 crore. Ministers inaugurated