பெண் அமைச்சருக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்...! 'இதுபோன்றது என்னையும் பாதித்திருக்கிறது'...! - தமிழிசை ஆவேசம்
Personal attack against female minister this affected me too Tamilisai Aavesam
பெண் அமைச்சரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்படும் இணையவழி தாக்குதல்களுக்கு தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் கருத்து மோதல்கள் இருப்பது இயல்பானது என்றாலும், அதற்காக ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் விமர்சனங்கள் அமையக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது சமூக வலைத்தளப் பதிவில் தமிழிசை கூறியிருப்பதாவது,"ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் தனிப்பட்ட முறையில் குறிவைத்து நடத்தப்படும் இணையவழி தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை. அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட மரியாதையை புண்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது.

ஒரு பெண் அமைச்சர் தனது பதவிப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், தன்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களுக்கும் தாக்குதல்களுக்கும் பதிலளிக்கவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவது மிகவும் வேதனையானது.
இதுபோன்ற இணையவழி கேலிகளும் அவதூறுகளும் ஒரு பெண்ணின் மன அமைதி, தன்னம்பிக்கை மற்றும் பணியில் செலுத்தும் கவனம் ஆகியவற்றை பாதிக்கக்கூடும். மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் ஆற்றலையும் இத்தகைய செயல்கள் திசைதிருப்புகின்றன.
நான் எனது கொள்கையிலும், எனது கட்சியிலும் உறுதியுடன் நிற்கும் பா.ஜ.க. பெண் தலைவர். ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுத்ததற்காக என்னை குறிப்பிட்ட அரசியல் அணியுடன் தொடர்புபடுத்தி விமர்சிப்பதும், இணையவழியில் கேலி செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
நானும் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணை குறிவைத்து கூறப்படும் வார்த்தைகள் அவரது மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால், அந்த தாக்குதல்கள் என்னை ஒருபோதும் அசைக்கவில்லை. மாறாக, இன்னும் அதிக உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
ஒரு பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்க குரல் கொடுப்பது எந்த அரசியல் அணியைச் சேர்ந்தது என்பதற்கான அடையாளம் அல்ல. அது மனிதநேயத்தின் வெளிப்பாடு.ஒரு பெண் அரசியல்வாதியின் செயல்பாடுகளில் குறைகள் இருப்பதாக கருதினால், அதனை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். அவரது கொள்கைகளை கேள்வி எழுப்பலாம். அவரது முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையையோ, பெண்ணாக இருப்பதையோ முன்வைத்து அவமதிக்கும் வகையில் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.அரசியலை அரசியலால் எதிர்கொள்ள வேண்டும். கருத்துக்கு கருத்தால் பதிலளிக்க வேண்டும். உண்மைக்கு ஆதாரங்களுடன் பதில் அளிக்க வேண்டும்.
விமர்சனங்கள் வலுவானதாக இருக்கலாம்; ஆனால் அவை ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்தும் எல்லையை கடக்கக்கூடாது.இணையவழியில் எத்தனை விமர்சனங்களும் தாக்குதல்களும் வந்தாலும், பெண்கள் அதற்காக அஞ்சவோ, அமைதியாக பின்வாங்கவோ மாட்டார்கள்.
உறுதியுடன் நின்று தங்களது பணியை தொடர்ந்து செய்வார்கள்.மக்களுக்காக பணியாற்றும் ஒவ்வொரு பெண் தலைவருக்கும் இந்த உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.
தனிப்பட்ட தாக்குதல்கள் தங்களது பயணத்தை தடுக்க அனுமதிக்காமல், இன்னும் வலிமையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Personal attack against female minister this affected me too Tamilisai Aavesam