ரூ.1 லட்சம் சம்பளம் என ஆசை காட்டி கடத்தல்...? மியான்மர் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்களின் அதிர்ச்சி நிலை...!
Kidnapping pretext salary 1 lakh shocking situation Tamil Nadu youth trapped at Myanmar border
தாய்லாந்தில் கைநிறைய சம்பளம், கணினி வேலை என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்கள், மியான்மர் எல்லைப் பகுதியில் செயல்படும் சர்வதேச இணையவழி குற்றக் கும்பல்களின் பிடியில் சிக்கி கொடுமைகளை அனுபவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தங்களை மீட்டு தாயகம் அழைத்துச் செல்லுமாறு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ரகசியமாக பதிவு செய்த காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தாய்லாந்தில் தரவு உள்ளீடு மற்றும் வாடிக்கையாளர் சேவை பணிகளுக்கு ஆட்கள் தேவை என்றும், மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்களை பார்த்து வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரி இளைஞர்களை முகவர்கள் அணுகி, வேலை விசா பெறுவதில் தாமதம் ஏற்படும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய இளைஞர்களை சுற்றுலா விசாவில் அவசரமாக தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பாங்காக் விமான நிலையத்தில் இளைஞர்கள் வந்திறங்கியதும், அவர்களை உள்ளூர் முகவர்கள் கார்களில் அழைத்துச் சென்றுள்ளனர். வேலை வழங்கப்பட உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்வதாக நம்பிய இளைஞர்களை, தாய்லாந்து-மியான்மர் எல்லையை கடந்து ஆபத்தான பகுதிகளுக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கே.கே. பார்க், மயாவடி உள்ளிட்ட முகாம்களுக்குள் அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முகாம்களுக்குள் சென்றதும் இளைஞர்களின் கடவுச்சீட்டு, கைபேசி மற்றும் அடையாள ஆவணங்கள் பறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இந்தியர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்து பல்வேறு இணையவழி மோசடிகளில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இணையவழி முதலீட்டு மோசடி, காதல் வலை மூலம் பணம் பறித்தல், போலி கைது அச்சுறுத்தல் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தினசரி இலக்கை எட்டத் தவறினாலோ அல்லது மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்தாலோ, இளைஞர்கள் கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு வழங்காமல் பட்டினியில் வைத்தல், இரும்புக் கம்பிகளால் தாக்குதல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல் உள்ளிட்ட கொடூரமான துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகார்களின் அடிப்படையில், தமிழக சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இளைஞர்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் முகவர்களை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி, மணவாளன், ராஜ்குமார், தீபக் டோனா மற்றும் ஜோவின் அபிஷேக் ராஜன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.இந்த கடத்தல் வலையின் பின்னணியில் செயல்படும் சர்வதேச கும்பலின் தொடர்புகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முகாம்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞர்கள், அதிக சம்பளம் என்ற கவர்ச்சியான விளம்பரங்களை மட்டும் நம்பி பணம் செலுத்தவோ, வெளிநாடு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறையான வேலை விசா இல்லாமல் சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்வது சட்டவிரோதமானது என்பதால், உரிய வேலை விசா மூலம் மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும்.
மேலும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக மட்டுமே வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இதுதொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், தமிழக அரசின் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Kidnapping pretext salary 1 lakh shocking situation Tamil Nadu youth trapped at Myanmar border