நம்ம டார்கெட் திமுகதான்..சீமானை கண்டுக்காதீங்க! தேர்தல் வியூகம்! தவெக தலைகளுக்கு விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
Our target is DMK donot look at Seeman Election strategy Vijay strict order to Thaveka heads
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. நடிகராக இருந்தபோதே அரசியல் ஆசை கொண்டிருந்த விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதோடு, அதை அரசியல் கட்சியாகவும் உருவாக்கி விட்டார். ஒரே ஆண்டில் இரண்டு பெரும் மாநாடுகளை நடத்தி, அதிமுக-திமுக போன்ற கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக மதுரையில் நடந்த மாநாடு மிகப்பெரிய அளவில் நடந்ததால், அதற்கு பிறகு விஜயின் பேச்சே தமிழக அரசியலில் விவாதமாகியது.
இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விஜயின் பேச்சைக் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் விஜயின் உரையை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். இடும்பவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன் போன்றோர் திறந்தவெளியில் விமர்சனம் மேற்கொண்டனர்.
ஆனால், அதைவிட தீவிரமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஓராண்டாகவே விஜயை நேரடியாக குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியலுக்குள் வருவதற்கு முன்பு ‘என் தம்பி விஜய் வரட்டும்’ என ஆதரவு தெரிவித்த அவர், கட்சி துவங்கிய பின் விஜயின் கொள்கைகள், குறிப்பாக பெரியார் சார்ந்த நிலைப்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறார். மேலும், சில வாரங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு சீமான் விமர்சனங்கள் இன்னும் அதிகரித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பாஜக மற்றும் திமுகவை விட சீமான் தான் தொடர்ந்து அதிகமாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையில், “சீமான் குறித்து எவரும் பதில் சொல்லக்கூடாது” என விஜய் கட்சியினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கட்சியினர் விளக்குகையில், “மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் வலுவான எதிர்க்கட்சி என்ற தோற்றம் உருவாகும். நாம் தமிழர் போன்ற ஆட்சிக்கு வராத கட்சிகளுடன் நேரத்தை வீணடித்தால் அரசியல் பலன் எதுவும் இல்லை. தேவையில்லாமல் எதிரிகள் மட்டுமே உருவாகிறார்கள். எனவே சீமான் குறித்தோ, அவர் விமர்சனங்களுக்கோ எதுவும் பேச வேண்டாம். கட்சியின் இரண்டாம் நிலை நிர்வாகிகளும் இதைப் பின்பற்ற வேண்டும்” என்று விஜய் தெளிவாகச் சொல்லியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சீமான் தொடர்ச்சியாக விஜயை விமர்சிக்க, ஆனால் விஜயும் அவரது கட்சியும் அமைதியாகவே இருப்பது என்ற நிலைமை தற்போது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Our target is DMK donot look at Seeman Election strategy Vijay strict order to Thaveka heads