பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம்...! - சென்னையில் 750 பேர் இன்று கைது
Nurses protest demanding permanent employment 750 people arrested Chennai today
தொகுப்பூதிய செவிலியர்களின் போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பணி நிரந்தரம் வழங்க வேண்டும், மேலும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொகுப்பூதிய செவிலியர்கள் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் அனைவரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி கிளாம்பாக்கம் பகுதியில் இறக்கி விட்டனர்.
இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே செவிலியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் மீண்டும் கைது செய்து, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
காவலில் இருந்தபோதும் செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் நேற்று ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் பரபரப்பான சூழல் நிலவியது.இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 723 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
இருப்பினும், முக்கிய கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்படாததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.செவிலியர்களின் தொடர் போராட்டம், மாநிலம் முழுவதும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Nurses protest demanding permanent employment 750 people arrested Chennai today