என்னை யார் இயக்குகிறார்...? மனம் திறந்து உண்மையை சொன்ன செங்கோட்டையன்!
Nobody directed me say Sengottaiyan interview
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “நான் 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், என்னை யாராலும் இயக்க முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக அல்ல என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது குறித்து கேட்ட கேள்விக்கு, “அது குறித்து பின்னர் தெரிந்துகொள்வீர்கள். நல்லதே நடக்கும். தேர்தல் ஆணையத்திடம் 258 பக்க ஆவணங்களை கொடுத்துள்ளேன். அதன் விவரங்களை இப்போது வெளியிட முடியாது” என்றார்.
அதிமுக ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டதா என கேட்கப்பட்டபோது, “அதிமுக குடும்ப ஆதிக்கத்தில் இயங்கி வருகிறது என்பது உங்களுக்கே தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, “என்னை யாரும் இயக்க முடியாது. நான் அரசியலில் 53 ஆண்டுகள் அனுபவமுள்ளவன்” எனக் கடுமையாக மறுத்தார்.
மூத்த தலைவராக இருந்த தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு, “அதை அவர்களிடம் கேளுங்கள்” எனச் சுருக்கமாகப் பதிலளித்தார். மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததைப் பற்றி, “அது அவருடைய விருப்பம்” என்றார்.
குடும்ப ஆதிக்கம் குறித்து மேலும் கூறிய அவர், “மகன், மைத்துனர், மருமகன் என குடும்பத்தினர் தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது மூத்த நிர்வாகிகளின் பணியில் இடையூறாக உள்ளது” என்றார்.
“அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வருவதால் கட்சி கரைகிறதா?” என்ற கேள்விக்கு, “அதை நீங்கள் முடிவு செய்யுங்கள்” எனச் சிரித்தபடி கூறினார்.
இறுதியாக, “எடப்பாடி அணியிலிருந்து சிலர் எனது கருத்துக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு ஆபத்து” என செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
English Summary
Nobody directed me say Sengottaiyan interview