இனி மனு கொடுத்துட்டு மாசக்கணக்கில் காத்து கிடக்க வேணாம்...! 30 நாட்களில் தீர்வு...! - அரசு அதிரடி உத்தரவு
No more waiting months after submitting petition Solution within 30 days Government action order
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் எந்த மனுவும் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது என்றும், துறைகளின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,"அரசுத் துறைகளில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் அண்மையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கும் பல்வேறு நிர்வாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.அதன்படி, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு மனுவும் காலதாமதமின்றி பரிசீலிக்கப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். மனுக்களின் நிலை குறித்து துறைத் தலைவர்கள் வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எந்த மனுவும் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்கப்படக் கூடாது எனக் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்கனவே வகுத்துள்ள நடைமுறைகளின்படி, அனைத்து துறைத் தலைவர்களும் மாதந்தோறும் மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின் முடிவுகள் குறித்த அறிக்கைகள் உடனடியாக அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். அதேபோல், கண்காணிப்பு அதிகாரிகளும் மாதந்தோறும் களப்பணிகளை மேற்கொண்டு, தங்களது ஆய்வு அறிக்கைகளை பொதுத்துறை வாயிலாக தலைமைச் செயலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து அரசாணைகளும் எந்தவித காலதாமதமும் இன்றி சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், ஆளுநர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகளுக்கான அரசாணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'உங்கள் அரசை தெரிந்து கொள்ளுங்கள்' திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக தனி தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி உள்ளிட்ட சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய மானியங்கள் மற்றும் நிலுவை நிதிகளை விரைவாக பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தங்களது துறைகளில் நடைபெறும் முக்கிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் அவசர நிர்வாக நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது முழுமையான தகவல்களை வழங்கி, நிர்வாக ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலர் வலியுறுத்தியதாக அந்த உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
English Summary
No more waiting months after submitting petition Solution within 30 days Government action order