பிரபுதேவா செய்தது மன்னிக்கவே முடியாத தவறு! பரதநாட்டியத்தை இப்படி ஆடியிருக்கக் கூடாது! சஞ்சீவின் மனைவி கண்டனம்!
What Prabhu Deva did was an unforgivable mistake He should not have performed Bharatanatyam in that manner Sanjeev wife condemns the act
பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா, சென்னையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த நடனம் குறித்து நடிகர் சஞ்சீவின் மனைவியும் நடனக் கலைஞருமான பிரீத்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடன அசைவுகளால் "இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்" என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவா, தற்போது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பிஸியாக இயங்கி வருகிறார். அதேநேரம், அவரது நடன நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சமீபத்தில் சென்னை நாரத கான சபாவில், குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணனின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபுதேவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் மேடையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ பின்னர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சிலர் பிரபுதேவாவின் நடனத்தை பாராட்டிய நிலையில், மற்றொரு தரப்பினர் அது பரதநாட்டியத்தின் இலக்கணங்களுக்கேற்ப அமையவில்லை என்று விமர்சித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடனக் கலைஞரும், நடிகர் சஞ்சீவின் மனைவியுமான பிரீத்தி, "கிளாசிக்கல் நடனம் மட்டும்தான் அடிக்கடி தவறாக ஆடப்படுகிறது. இருந்தாலும் அதை யாரும் கேள்வி கேட்காமல் பாராட்டிவிடுகிறார்கள். பிரபுதேவா போன்ற ஒரு மிகப்பெரிய நடனக் கலைஞர் இப்படிப்பட்ட தவறைச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "இந்த வாய்ப்பை முறையாகப் பயிற்சி பெற்ற ஒரு இளம் பரதநாட்டியக் கலைஞருக்கு வழங்கியிருந்தால், அது அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும்" என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
பிரீத்தியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர், பரதநாட்டியத்தின் மரபு மற்றும் இலக்கணங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதால் அவரது விமர்சனம் நியாயமானது என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், பிரபுதேவா தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்றும், அதனை சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், பிரபுதேவாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி தற்போது கலை வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
English Summary
What Prabhu Deva did was an unforgivable mistake He should not have performed Bharatanatyam in that manner Sanjeev wife condemns the act