விஜயபாஸ்கரின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன விஜய்? முகமது பர்வாஸுக்கு ஆதரவாக நின்ற தலைமை! விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்!
Did Vijay say no to Vijayabhaskar request The leadership stood by Mohammed Parvas Vijayabhaskar next move
தமிழக அரசியலில் சமீபத்தில் பெரும் கவனம் பெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்தது அமைந்தது. அவரது வருகையால் புதுக்கோட்டை மாவட்ட அரசியலிலும், தவெகவின் உள்கட்சி அமைப்பிலும் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், மாவட்ட பொறுப்புகள் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, விராலிமலை இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் தனக்கு இடம் வழங்க வேண்டும் என்றும், அதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
விஜயபாஸ்கரின் நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இது கட்சியின் தற்போதைய நிர்வாகிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்தவரும் தற்போது தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சருமான ஜே. முகமது பர்வாஸின் மாவட்ட அதிகார வரம்பை இந்த கோரிக்கை பாதிக்கும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப காலம் முதலே புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தியவர்களில் ஒருவராக முகமது பர்வாஸ் கருதப்படுவதால், இந்த விவகாரம் கட்சித் தலைவர் விஜய்யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், தற்போதைய மாவட்ட அமைப்பே தொடரும் என்றும் தவெக தலைமை விஜயபாஸ்கரிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் அமைச்சராக செயல்பட்டு வரும் முகமது பர்வாஸின் செயல்பாடுகளுக்கும், மக்கள் செல்வாக்கிற்கும் கட்சியின் முழு ஆதரவு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில், விஜயபாஸ்கரின் அரசியல் அனுபவத்தை கட்சி பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவருக்கு மாவட்ட அளவிலான பொறுப்புக்கு பதிலாக மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் அவரின் அனுபவத்தை பயன்படுத்த முடியும் என்று தவெக உயர்மட்டம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்ற விஜயபாஸ்கரின் விருப்பம் குறித்தும் கட்சித் தலைமை பதிலளித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய முன்னுரிமை இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதே என்றும், அமைச்சரவை விரிவாக்கம் அல்லது புதிய நியமனங்கள் குறித்த முடிவுகள் அனைத்தும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்து எடுக்கப்படும் என்றும் தலைமை தரப்பு விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்தாலும், கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே உழைத்த நிர்வாகிகளின் முக்கியத்துவம் குறையாது என்பதையே இந்த நிலைப்பாடு வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Did Vijay say no to Vijayabhaskar request The leadership stood by Mohammed Parvas Vijayabhaskar next move