ஹாலிவுட் படம்னா முதல் ஆப்ஷனே அப்பா விஜய்தான்!அப்பா விஜய் குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!
If it a Hollywood movie my first choice is Dad Vijay jason Sanjay opens up about his father Vijay
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள சிக்மா திரைப்படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது தந்தை விஜய் குறித்து அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படம் முதலில் இன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, சிக்மா படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவயதில் போக்கிரி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றிய ஜேசன் சஞ்சய், பின்னர் நடிகராக இல்லாமல் இயக்குநராகும் பாதையைத் தேர்வு செய்தார். கனடாவில் திரைப்படக் கல்வி பயின்ற அவர், தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை லைகா நிறுவனம் மூலம் பெற்றார்.
பேட்டியில், "ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேத்தம் ஒரு படத்தை இயக்க உங்களை அழைத்தால், தமிழ் சினிமாவில் இருந்து எந்த நடிகரை அழைத்துச் செல்வீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய்,"முதல் ஆப்ஷனே அப்பாதான். இரண்டு பேருக்கும் நல்ல காம்பினேஷன் இருக்கும். ஆக்ஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகள் எல்லாமே செமையாக இருக்கும். அவர் இந்த பேட்டியை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்."என்று புன்னகையுடன் கூறினார்.
மேலும், இயக்குநராக வேண்டும் என்ற தனது கனவு குறித்து பேசிய அவர், "கனடாவில் படித்து முடித்து வந்த பிறகு, எனக்கென ஒரு குழுவை உருவாக்கி கதைகள் குறித்து விவாதிக்க ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு அலுவலகம் கூட இல்லை. ஒருநாள் திருவான்மியூரிலும், மற்றொரு நாள் தி.நகரிலும் சந்தித்து வேலை செய்தோம். சிறுவயதிலிருந்தே கதை சொல்லுவதில் ஆர்வம் இருந்தது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படிக்கும்போதுதான் சினிமாவுக்குள் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு முன்பு பைலட் ஆக வேண்டும் என்றும், பின்னர் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்" என்றார்.
ஜேசன் சஞ்சயின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது தந்தையைப் பற்றி அவர் இயல்பாகவும் பாசத்துடனும் பேசியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
If it a Hollywood movie my first choice is Dad Vijay jason Sanjay opens up about his father Vijay