சர்ச்சை காட்சி நீக்கம்: 'எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை'... - பரிதாபங்கள் சுதாகர் ஓபன் டாக்...!
Controversial scene removal We have no ulterior motive Pity Sudhakar open talk
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகனை நையாண்டி செய்ததாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், பிரபல யூடியூப் நகைச்சுவை சேனலான "பரிதாபங்கள்" புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்கு காரணமான காட்சியை நீக்கியதுடன், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று கோபி மற்றும் சுதாகர் தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் உணர்ச்சிவசப்பட்டு பேசிய காணொளியை நகைச்சுவை வடிவில் மாற்றி "பரிதாபங்கள்" யூடியூப் சேனலில் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் காணொளி இணையத்தில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைதள பதிவில், "வேதனையில் இருந்த ஒரு சிறுவனின் உணர்வுகளை கேலிப் பொருளாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். படைப்பாற்றல் கொண்ட கலைஞர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தீவிர விவாதமாக மாறியது. ஒரு சிறுவனின் மனவேதனையை நகைச்சுவை உள்ளடக்கமாக மாற்றியிருப்பது முறையல்ல என்றும், இணையப் பிரபலங்கள் தங்களது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், "பரிதாபங்கள்" குழுவைச் சேர்ந்த கோபி மற்றும் சுதாகர் இணைந்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அண்மையில் வெளியிடப்பட்ட "ஆடி மாச பாவங்கள்" காணொளியில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி சிலரின் மனதை புண்படுத்தியதாக தங்களுக்கு தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்றும், இருப்பினும் அது சிலருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய பகுதியை காணொளியிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது "பரிதாபங்கள்" குழுவின் நோக்கமல்ல என்றும், பார்வையாளர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதித்து செயல்படுவோம் என்றும் கோபி மற்றும் சுதாகர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
English Summary
Controversial scene removal We have no ulterior motive Pity Sudhakar open talk