மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம்...! ராகுல் காந்திக்கு சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு...!
Congress training camp Mamallapuram Rahul Gandhi gets grand welcome Chennai
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நிறைவடைகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி, காலை 10.05 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்றனர். அப்போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு, முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி நேரடியாக மாமல்லபுரம் சென்று மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார்.
அங்கு கட்சியின் எதிர்கால வளர்ச்சி, அமைப்பு வலுப்படுத்தல், தேர்தல் வியூகங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து மாவட்டத் தலைவர்களிடம் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பயிற்சி முகாம் நிறைவடைந்த பிறகு, மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில், தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்கிறார்.இதற்கிடையில், கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் நீட் தேர்வால் உயிரிழந்த நான்கு மாணவ, மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்த பின்னர், ராகுல் காந்தி மீண்டும் சென்னை திரும்பி, இன்று இரவு 7 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், மாமல்லபுரம் மற்றும் அவர் பயணிக்கும் முக்கிய பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Congress training camp Mamallapuram Rahul Gandhi gets grand welcome Chennai