இனி கடற்கரையில் குப்பை கொட்ட முடியாது...! - பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவால் உருவான சிறப்பு குழு...!
No more dumping garbage beach Special committee formed by Green Tribunal drastic order
சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் துண்டுகள் மற்றும் பல்வேறு குப்பைச் சிதைவுகள் அதிகளவில் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் மத்தியில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் வடசென்னையின் கடலோர சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்காக எடுத்துக்கொண்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கிழக்கு கடற்கரைப் பகுதியில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை முழுமையாக அகற்றும் நோக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் சிறப்பு கூட்டுக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த குழுவில் மீனவர் நலத்துறை இயக்குநர், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் மற்றும் காசிமேடு மீன்பிடித் துறைமுக மேலாளர் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடி தடைக்காலம் நிறைவடையும் ஜூன் 14-ந் தேதிக்குள் கடற்கரை பகுதிகளை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் என்றும், கடற்கரையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்ட தூய்மை நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
No more dumping garbage beach Special committee formed by Green Tribunal drastic order