Census 2027; ஆகஸ்ட் 01 முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்: சுயவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்க; சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்..!
Housing census work to begin from August 01
சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு வரும் 01-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இதன்போது குடும்பத்தினர் தங்கள் சுயவிவரங்களை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
''சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையை கணக்கிடும் பணி மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைகிறது. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாக திட்டமிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தகவல்கள்தான் அடிப்படையாக அமைகின்றது.

அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வரும் 1ம்தேதி முதல் ஆகஸ்ட் 30ம்தேதி வரை நடைபெறும். இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எனவே எந்த தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை வரும் 01-ஆம் தேதி முதல் தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.
சென்னையில் நேற்று வரை 56 ஆயிரம் குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மக்கள் தாங்களாகவே தங்களது வீட்டில் இருந்தபடி தங்களது சுய விவரங்களை மிக எளிதாக https://se.census.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய முடியும். எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மிக எளிதான இந்த சுயக் கணக்கெடுப்பின் வாயிலாக தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' என்று அறிக்கையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Housing census work to begin from August 01