நெல்லையில் அதிர்ச்சி...! 2-வது திருமணத்தை தட்டிக்கேட்ட காதல் மனைவியை கல்குவாரி குட்டைக்குள் தள்ளி கொன்ற கணவன்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி அருகே ஓராண்டாக மாயமாகி இருந்த பெண்ணின் கதி என்ன ஆனது என்ற மர்மம் தற்போது விலகியுள்ளது. 2-வது திருமணம் செய்த கணவரை தட்டிக்கேட்டதால், காதல் மனைவியை கல்குவாரி குட்டைக்குள் தள்ளி கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காட்டிய இடத்தில் இருந்து பெண்ணின் மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டாநகரை சேர்ந்தவர் மகாராஜா (38).

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அமராவதி (34) என்பவரை கடந்த 2008-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.கணவருடன் குடும்பம் நடத்தி வந்த அமராவதி, கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனார். அவரை தொடர்புகொள்ள அவரது தாயார் பலமுறை முயன்றும் முடியவில்லை.

மகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கவலை அடைந்த அவர், கடந்த 23-ந் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதைத்தொடர்ந்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அமராவதி மாயமானது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.விசாரணையின் ஒரு பகுதியாக மகாராஜாவிடம் காவலர்கள் விசாரித்தனர். இதில் அவர் அளித்த தகவல்கள் காவலர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.அமராவதியை கங்கைகொண்டான் அருகே உள்ள பாப்பான்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆத்திரத்தில் அமராவதியை தாக்கி, அங்கிருந்த கல்குவாரி குட்டைக்குள் தள்ளி கொலை செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்வின் பிரிஜித் மேரி தலைமையிலான காவலர்கள், மகாராஜாவை சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு அழைத்துச் சென்றனர்.மகாராஜா அடையாளம் காட்டிய இடத்தில் காவலர்கள் தீவிர தேடுதல் நடத்தினர்.

அப்போது ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்ட பல்வேறு எலும்புத் துண்டுகள் கிடைத்தன. அவற்றை காவலர்கள் கைப்பற்றினர்.மீட்கப்பட்ட எலும்புகள் அமராவதியுடையதா என்பதை உறுதி செய்வதற்காக அவை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன.சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி நேரில் பார்வையிட்டார். தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி தலைமையிலான குழுவினர் அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.

காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மகாராஜா ஏற்கனவே அமராவதியை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு அகிலா (23) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி அறிந்த அமராவதி, கணவரிடம் கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் அமராவதியை தனது இருசக்கர வாகனத்தில் பாப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு மகாராஜா அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த மகாராஜா அமராவதியை சரமாரியாக தாக்கி கல்குவாரி குட்டைக்குள் தள்ளி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமராவதி மாயமான பிறகு, அவர் வெளியூருக்கு சென்றிருப்பதாக தனது மகன்களிடம் மகாராஜா கூறி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமராவதி தொடர்பான உண்மை நீண்ட காலமாக குடும்பத்தினருக்கு தெரியாமல் இருந்துள்ளது.அமராவதியின் தாயார் அளித்த புகாரை தொடர்ந்து காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், மகாராஜாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து மகாராஜாவை கங்கைகொண்டான் காவலர்கள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓராண்டாக நீடித்த பெண் மாயமான வழக்கு, கல்குவாரியில் இருந்து மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டதன் மூலம் கொலை வழக்காக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai Husband kills his wife by pushing her quarry pit after she overheard him about his second marriage


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->