வானிலை அலர்ட்...! இடி, மின்னல், பலத்த காற்றுடன் அடுத்த சில நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை....!
Weather alert Thunder lightning strong winds heavy rain expected next few days
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு நிலவுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"கடந்த 24-ந் தேதி நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று காலை 8.30 மணியளவில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு உள் ஒடிசா பகுதிகளில் நிலவியது.

இன்று 26-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
27-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
28-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.29-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-ந் தேதி மற்றும் அக்டோபர் 1-ந் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
இருப்பினும், சில இடங்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம்.இந்த நாட்களில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.தமிழக கடலோரப் பகுதிகளில் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை எந்தவித எச்சரிக்கையும் இல்லை. அரபிக்கடல் பகுதிகளிலும் இதே காலகட்டத்தில் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இன்று 26-ந் தேதி வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.
எனவே, மேற்கண்ட காலகட்டத்தில் மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Weather alert Thunder lightning strong winds heavy rain expected next few days