அக்டோபர் 11-ல் ஒரே மேடையில் மோடி - விஜய்? மெட்ரோ தொடக்க விழாவால் தமிழக அரசியலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த நிகழ்வு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை ரீதியான எதிரியாகவும் அக்கட்சி தொடர்ந்து குறிப்பிட்டு வந்த நிலையில், பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் ஒரே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் தவெக, பாஜகவை அதே அளவுக்கு எதிர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் ஏற்கனவே அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 118 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான சுமார் 14.6 கிலோமீட்டர் தொலைவிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்திருந்தாலும், பல்வேறு நிர்வாக மற்றும் ஒப்புதல் நடவடிக்கைகளால் தொடக்க விழா தாமதமானதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் தேதி மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தாமதங்களுக்கு பிறகு, தற்போது அக்டோபர் 11ஆம் தேதி சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இந்த வழித்தடத்தில் முதல்கட்டமாக 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் சேவை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கூடுதலாக 6 நிலையங்களில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், சென்னை ஐஐடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சிகளும் பிரதமரின் சென்னை பயணத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாஜக சார்பிலும் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் ஒரே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் முக்கிய நிகழ்வாக இது அமையக்கூடும் என்பதால், அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற உள்ள மெட்ரோ தொடக்க விழாவை அரசியல் கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi and Vijay on the same stage on October 11 Metro inauguration sparks a buzz in Tamil Nadu politics


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->