அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் படம் மாற்றம்.. புதிய புகைப்படத்திற்கு உத்தரவு; செலவு குறித்து எழும் கேள்விகள்!
Chief Minister Vijay portrait in government offices to be replaced order issued for a new photograph questions raised regarding the cost
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை மாற்றி, புதிய புகைப்படத்தை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த புகைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், தற்போது புதிய புகைப்படம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் எந்த புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட அந்த புகைப்படமே வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய்யின் தோற்றம் மற்றும் சிரிப்பு செயற்கையாக இருப்பதாக சில தவெக ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்ததுடன், வேறு புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தற்போது முதலமைச்சர் விஜய்யின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அரசு அலுவலகங்களில் அந்த புகைப்படத்தையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை அரசு கருவூலத்திற்கு தேவையற்ற செலவு ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தலைமைச் செயலகம், 43-க்கும் மேற்பட்ட முதன்மைத் துறைகள், 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்டாட்சியர் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் 12,500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் என ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் புதிய புகைப்படத்தை மாற்றி வைப்பதற்கான செலவு குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புகைப்படங்களை மாற்றுவதற்கான செலவு தோராயமாக ரூ.6.17 கோடி வரை இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கணக்குகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தத் தொகை குறித்த அதிகாரப்பூர்வ செலவுக் கணக்கு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புகைப்படத்தை மாற்றுவதற்காக அரசு நிதியை செலவிடுவதற்கு பதிலாக, அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே ஒரு புகைப்படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மாற்றுவதற்கான முடிவு ஏன் எடுக்கப்பட்டது, புதிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டாலும், புதிய புகைப்படத்தை மாற்றியதற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து தெளிவான விளக்கம் வெளியாகவில்லை.
English Summary
Chief Minister Vijay portrait in government offices to be replaced order issued for a new photograph questions raised regarding the cost