எம்ஜிஆரின் திருச்சி சொத்துக்கு நிர்வாக உரிமை கோரிய ஜானகி மகன் வழக்கு தள்ளுபடி! உயர் நீதிமன்றம் உத்தரவு!தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்?
Case filed by Janaki son claiming administrative rights over MGR Trichy property dismissed High Court order Why was it dismissed
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான திருச்சி சொத்தின் நிர்வாக உரிமையை கோரி, ஜானகியின் மகன் சுரேந்திரன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரத்தில், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். தனது சொத்துக்கள் யார் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட்டு உயில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திருச்சியில் இருந்த குறிப்பிட்ட சொத்து குறித்து அந்த உயிலில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என சுரேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சொத்தை நிர்வகிக்கும் உரிமையை ஜானகியின் மகனான தனக்கு வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி மரியா கிளீட் முன்பு செப்டம்பர் 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எம்.ஜி.ஆர். கடந்த 1987ஆம் ஆண்டு தனது சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பதை குறிப்பிட்டு உயில் எழுதியிருந்ததாகவும், அதில் திருச்சியில் உள்ள சொத்து குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், அந்த சொத்தை எம்.ஜி.ஆர். வேறு யாருக்கும் எழுதி வைக்கவில்லை என்றும், ஜானகி எம்.ஜி.ஆரின் வாரிசு என ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அவரது மகனான தனக்கு சொத்தின் நிர்வாக உரிமை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதனிடையே, எம்.ஜி.ஆரின் சகோதரர் சக்கரபாணியின் வாரிசுகள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆரின் சொத்தில் தங்களுக்கும் உரிமை இருப்பதாகக் கூறிய அவர்கள், தங்களையும் இந்த வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும் என இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மரியா கிளீட், ஜானகி எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கான போதிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என குறிப்பிட்டார். மேலும், ஜானகி 1996ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், 2019ஆம் ஆண்டில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இத்தனை ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட சொத்து யார் வசம் இருந்தது, யாருடைய பெயரில் மாற்றப்பட்டது, சொத்து அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். சொத்து தொடர்பான உரிமையை நிரூபிக்க போதுமான ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், சுரேந்திரன் தாக்கல் செய்த வழக்கையும், சக்கரபாணியின் வாரிசுகள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேவேளையில், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுவதற்கு மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், எம்.ஜி.ஆரின் திருச்சி சொத்து தொடர்பான உரிமை விவகாரம் தற்போது மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Case filed by Janaki son claiming administrative rights over MGR Trichy property dismissed High Court order Why was it dismissed