பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவன்: கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா..? அனைத்து கோணத்திலும் விசாரணை தேவை: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
Nayinar Nagendran insists on investigation into whether the student who was found mysteriously dead in a closed well at the school was murdered and thrown into the well
திருப்பத்தூர் அருகே பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா..? என்று அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
''திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில்,பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா..?
மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும்,பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.'' என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran insists on investigation into whether the student who was found mysteriously dead in a closed well at the school was murdered and thrown into the well