நமச்சிவாயம்,ஜான் குமார் பதவியை பறிக்கவேண்டும்..திமுக MLA சம்பத் வலியுறுத்தல்!
Namasivayam John Kumar should be removed from the post DMK MLA Sampath urges
நமச்சிவாயம் அவர்களின் அமைச்சர் பதவி அல்லது திரு ஜான் குமார் அவர்களின் பாராளுமன்ற செயலர் பதவியையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்கள் பறிக்க வேண்டும் - திமுக இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் கூறியதாவது :புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் திரு. ஜான்குமார் அவர்கள் புதுவையில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது இங்கு உள்ளவர்களால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது என்ற கோணத்தில் இது குறித்து மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது சட்டம் ஒழுங்கு சரி இல்லை என எதிர்க்கட்சி என்ற வகையில் திமுக தொடர்ச்சியாக சட்டமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றது. எங்களின் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையிலும் எங்கள் கருத்து உண்மை என்பதை ஏற்று எங்களுடன் சேர்ந்து அரசையும் உள்துறை அமைச்சர் அவர்களையும் கண்டித்த திரு ஜான் குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளும் என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசின் பாஜக எம்எல்ஏவாகவும் முதல்வரின் பாராளுமன்ற செயலர் என்ற அரசு பதவியையும் வகித்து வருகின்றார்.திரு ஜாண் குமார் அவர்கள்.இவர் சார்ந்துள்ள பாஜகவை சேர்ந்த திரு. நமச்சிவாயம் அவர்கள் தான் உள்துறைக்கு பொறுப்பு வகிக்கின்றார். புதுச்சேரியின் சட்டம் ஒழுங்குக்கு அவரே முழு பொறுப்பு ஏற்கும் நிலையில் உள்ளார். திரு ஜான் குமார் அவர்களே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியதை வெறுமனே கடந்து செல்ல முடியாது. புதுச்சேரி அரசின் முதலமைச்சர் உட்பட 10 பதவிகளில் ஒரு பதவியான பாராளுமன்ற செயலர் பதவியில் உள்ளவர். இது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
திரு ஜான் குமார் அவர்கள் கூறிய சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால் உள்துறை பொறுப்பு வைக்கும் திரு நமச்சிவாயம் அவர்களையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். புதுவையில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுவதாக மாண்புமிகு முதல்வர் கருதினால் அரசின் முக்கிய பதவியில் இருந்து கொண்டே அரசை விமர்சித்த திரு ஜான் குமார் அவர்களை முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் பதிவிலிருந்து நீக்க வேண்டும். இல்லையேல் அமைச்சரும், பாராளுமன்ற செயலரும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என பொதுமக்கள் நினைக்கும் நிலை ஏற்படும். எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் கோரிக்கைவிடுத்துள்ளார்.
English Summary
Namasivayam John Kumar should be removed from the post DMK MLA Sampath urges