தொழில் போட்டியா..? முன்விரோதமா..? ஆவடியில் ரியல் எஸ்டேட் பிரமுகர் படுகொலை - CCTV காட்சிகளை வைத்து காவலர்கள் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் ஆவடி அருகே, பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக தப்பியோடிய இருவரை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஆவடியை அடுத்த பொத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (38).

கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு மீனா (35) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.நேற்று மாலை சதீஷ் தனது இருசக்கர வாகனத்தில் பொத்தூர் பகுதியில் உள்ள ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்தனர்.

பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சில நொடிகளில் வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷை சரமாரியாக வெட்டியதுடன், இரும்புக் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சதீஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த பயங்கர சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து, சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை முன்விரோதத்தின் விளைவாக நடந்ததா, தொழில் போட்டி காரணமாக அரங்கேறியதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் இருவரையும் கைது செய்வதற்காக காவலர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder real estate personality Avadi Police investigating intensively using CCTV footage


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->