'மார்க் எடுத்தா விமான டிக்கெட் இலவசம்...! கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மாணவியை விமானத்தில் பறக்கவைத்த அரசுப் பள்ளி ஆசிரியை...!
Free flight ticket if you get good mark Government school teacher keeps promise and lets student fly plane
அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலரையும் நெகிழச் செய்து வருகின்றன. அந்த வகையில், பொதுத்தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, தனது சொந்த செலவில் விமானப் பயணத்திற்கு அழைத்துச் சென்ற அரசு பள்ளி ஆசிரியையின் செயல் கல்வி வட்டாரங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மலர்விழி. கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு, தாம் கற்பித்த தாவரவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரியல் பாடத்தில் 90-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெறும் மாணவரை, தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக அவர் மாணவர்களிடம் உறுதியளித்திருந்தார்.

ஆசிரியையின் ஊக்கமூட்டும் அறிவிப்பை இலக்காகக் கொண்டு கடினமாக உழைத்த மாணவி மகிழா, உயிரியல் பாடத்தில் 90 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். மேலும், மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 524 மதிப்பெண்கள் பெற்று சிறப்பான தேர்ச்சி பெற்ற அவர், தற்போது பொறியியல் படிப்பில் சேரவிருக்கிறார்.
தான் அளித்த வாக்குறுதியை மறக்காமல் காத்த ஆசிரியை மலர்விழி, மாணவி மகிழாவை கடந்த மாதம் 23-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் பயணம் மேற்கொண்ட அவர்கள், பின்னர் மற்றொரு விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.இதன் மூலம் இதுவரை விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவை மாணவி மகிழா முதன்முறையாக நனவாக்கிக் கொண்டார்.
அதன் பின்னர், இருவரும் குளிர்சாதன வசதி கொண்ட தொடர்வண்டி பெட்டியில் பயணம் செய்து 26-ஆம் தேதி நாகர்கோவிலுக்கு திரும்பினர்.ஆசிரியை மலர்விழி, இதற்கு முன்பும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய காலத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட நான்கு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களை விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்று ஊக்குவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும், அவர்களின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கவும் தொடர்ந்து பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவரது அர்ப்பணிப்பு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற காலை நேரக் கூட்டத்தில் பங்கேற்ற மாணவி மகிழா, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்."ஆசிரியை என்னை விமானத்தில் அழைத்துச் செல்லப் போவதாக கூறிய தருணம் என் வாழ்க்கையின் மறக்க முடியாத இனிய அதிர்ச்சியாக இருந்தது. இதுவே நான் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்த அனுபவம்.
மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்குக் கூட கிடைக்காத அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. என் கனவை நனவாக்கிய ஆசிரியை மலர்விழிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
English Summary
Free flight ticket if you get good mark Government school teacher keeps promise and lets student fly plane