'அமைச்சருக்குத் தெரியும்னு சொன்னாங்க...' ரூ.22 லட்சம் வசூல் வேட்டை நடத்திய த.வெ.க. புள்ளிகள்...! பின்னணியில் நடந்தது என்ன...?
minister said he knew TVk member bribe 22 lakhs What happened background
விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான போக்குவரத்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார், அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சவுந்தரராஜன், லாரி போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் கார்த்திகேயன் (30) மற்றும் அருப்புக்கோட்டை வடக்கு, மேற்கு இணைச் செயலாளர் சதீஷ்குமார் (28) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகள் மூலம் மதுபானங்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக இருவரும் சவுந்தரராஜனிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக மதுவிலக்குத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு பணம் வழங்க வேண்டியிருப்பதாகக் கூறி, கணிசமான தொகையை கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை நம்பிய சவுந்தரராஜன், ரூ.22 லட்சத்தை கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமாரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், ஒப்பந்தம் கிடைத்த பிறகு கூடுதலாக பணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.காலம் கடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், சவுந்தரராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மதுவிலக்குத்துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதால், அவர் நேரடியாக அந்தத் துறையின் அமைச்சரான விக்னேஷை சந்தித்து நடந்த விவரங்களை எடுத்துரைத்து புகார் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர், இந்தப் பணப் பரிவர்த்தனைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து, த.வெ.க. அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு, மேற்கு இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்த காவலர்கள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கோவையைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் (42) என்பவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் காவலர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
minister said he knew TVk member bribe 22 lakhs What happened background