குடும்பத் தகராறு; 06 மாத பெண் குழந்தையை பரிதவிக்கவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு..!
Mother commits suicide abandoning her six month old daughter due to a family dispute
பல்லாவரம் கன்டோன்மென்ட், பெரியபாளையத்தம்மன் கோவில் அருகே கம்பர் தெருவில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஷ்னாமா (18) என்பவர், கடந்த 03 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் 06 மாத பெண் குழந்தை உள்ளனர். இவரது கணவர், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் மாலில் ஏசி மெக்கானிக்காக வேலைபார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள வீடுகளில் குஷ்னாமா வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. ஆனாலும் அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்ந்து வாழ முயற்சித்துள்ளனர். இதேபோல், நேற்று காலை மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமான குஷ்னாமா சாப்பிடாமல் இருந்துள்ளார். அவரது கணவரும் சாப்பிடாமல் வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான குஷ்னாமா, தனது 06 மாத பெண் குழந்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், படுக்கையறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லாவரம் போலீசார் விரைந்து சென்று, குஷ்னாமாவின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் குடும்பத் தகராறு குறித்து குஷ்னாமாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
Mother commits suicide abandoning her six month old daughter due to a family dispute