மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லையா? மக்கள் நீதி மய்யம் கொந்தளிப்பு!
MNM Condemn To Central Govt For Education Channels
மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று மக்கள் நீதி மய்யம் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறது.
மாநில சுயாட்சி மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலையாக கிராமங்களுக்கு உள்ளாட்சியில் தன்னாட்சி வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இப்போது தொலைக்காட்சி நடத்தும் அதிகாரம் தனக்கு கீழ்வரும் பிரச்சார் பாரதி நிறுவனத்துக்கே உண்டு என்று அறிவித்திருக்கிறது.
இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதால் மக்கள் நீதி மய்யம் இதை வன்மையாக கண்டிக்கிறது. இதனால் ஏற்கனவே மாநில அரசால் நடத்தப்படும் கல்வித்தொலைக்காட்சி தடைபடும் ஆபத்து இருப்பதை மக்கள் நீதி மய்யம் கவலையோடு பார்க்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைக்காட்சி நடத்த அதிகாரம் இருக்கும் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும் அரசாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் நம் தமிழக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இந்த அரசு இருக்கும் அதிகாரங்களையும் பறிகொடுத்துவிட்டு ஏமாந்து நிற்ககூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Condemn To Central Govt For Education Channels