அலறும் மருத்துவ வட்டாரம்...! பணிக்கு வராமல் அலட்சியம் காட்டிய டாக்டர்கள்...! -1,420 பேர் மீது பாய்கிறது ஒழுங்கு நடவடிக்கை...!
medical community crying out Doctors who showed negligence by not coming work Disciplinary action being taken against 1420 people
தமிழக அரசு மருத்துவ அமைப்பையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், 1,420 அரசு டாக்டர்கள் எந்த முன்அறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தகவல் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தனது சமூக வலைதள பதிவின் மூலம் இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன.அரசு மருத்துவ அலுவலர்களாக பணியில் சேரும் டாக்டர்கள், மேற்படிப்பு கல்வி பெறுவதற்காக நீட் தேர்வு அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி பெறுகின்றனர்.

ஆனால் இந்த அனுமதி குறிப்பிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது.அதாவது, பட்ட மேற்படிப்பு முடித்த பிறகு ஓய்வு பெறும் வரை அரசுப் பணியில் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாக உள்ளது. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டும் பிணைத்தொகை செலுத்தி பணியிலிருந்து விலகும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்று உயர்கல்வி முடித்த சில டாக்டர்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசுப் பணியை விட்டு விலகி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற டாக்டர்களை தொடர்ந்து கண்காணித்து மீண்டும் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி பணிக்கு திரும்பாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல், அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய காரணத்தால், அவர்கள் செலுத்த வேண்டிய பிணைத்தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையையும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அல்லது பிணையாளர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தற்போது மொத்தம் 1,420 டாக்டர்கள் பணிக்கு வராமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின் கீழ் 370 பேர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் 766 பேர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் கீழ் 284 பேர் உள்ளனர்.
மொத்தமாக பணிக்கு வராத 1,420 பேரில் 680 டாக்டர்கள் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 740 பேர் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த விவகாரம் தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடு மற்றும் மருத்துவ சேவை அமைப்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
medical community crying out Doctors who showed negligence by not coming work Disciplinary action being taken against 1420 people