தேனீ கொட்டி கார் ஓட்டுநர் பலி - கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!!
man died for honey bee bite in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் உள்ள ஒரு அரச மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்த தேன் கூட்டை நேற்று காலை சிலர் அழித்தபோது அதிலிருந்த தேனீக்கள் பறந்து வந்து அப்பகுதியில் இருந்த அதே ஊரை சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி உள்ளிட்ட 10 பேரை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் காயமடைந்த 10 பேரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில், வீட்டில் இருந்த விராசாமிக்கு இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர், வீரசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த போதும் வீராசாமி உயிரிழந்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கிராம மக்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கவேண்டும், தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் வீராசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
man died for honey bee bite in kallakurichi