மத்திய அரசின் 'வந்தே மாதரம்' சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்..!
Madras High Court grants permission to file a case challenging the Central Governments Vande Mataram circular
தமிழகத்தில் முதல்வராக விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளை முதலில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடி துவங்கும் மரபை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''1891-ஆம் ஆண்டு தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியே தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் துவங்கப்படுவதும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்த தடையையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்குக்கு அல்ல, அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது. பல தலைமுறைகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே துவங்கப்பட்டுள்ளது.
வந்தே மாதரத்துக்கு எதிராகவோ, தேசிய கீதத்துக்கு எதிராகவோ இந்த வழக்கை தொடரவில்லை. எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும்'' என அரசுக்கு உத்தரவிடும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வுவில் குறிப்பிட்டுள்ளதாவது;
மத்திய அரசின் சுற்றறிக்கை தமிழகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில், சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், இந்த மனுவை திரும்பப் பெற்று மத்திய அரசு சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கூறி, மனுதாரர் தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெறவும், சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Madras High Court grants permission to file a case challenging the Central Governments Vande Mataram circular